தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் புலியூர் வாசன். இவர் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 20 ஆண்டுகளாக விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
அதில், "எங்கள் ஊரில் உள்ள குளத்திற்கு கடந்த 20 ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக எங்களது தாய் கிராமமான நொச்சி குளத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதை தடை செய்யும் நோக்கில் நொச்சி குளத்தில் சிலர் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, தரைவழியாக தண்ணிரை உறிஞ்சி எடுத்து விட்டு, எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நாங்கள் போலீசார் மற்றும் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் நேரடியாக வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் எங்கள் ஊருக்கு குடிநீர் வருவதை தடுக்கும் நோக்கில் சிலர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். எங்கள் ஊரில் இரு வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னையால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையிலும், குடிநீர் விநியோகத்தை தடுக்கும் வகையிலும் செயல்படுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஊருக்கு தடையில்லாமல் குடிநீர் வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயாணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் தகவல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பெண் காவலருக்கு தொடர் தொல்லை: வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்