மதுரை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட பண்டைத் தமிழர்கள், தாங்கள் இனக்குழுக்களாக வாழ்ந்த காலத்திலேயே தங்களுக்காக போரிட்டோ அல்லது சண்டையிட்டோ உயிர் நீத்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
இதற்கான பல்வேறு சான்றுகள் தமிழ்நாடு முழுவதும் தற்போது கிடைத்து வருகின்றன. பண்டைய நடுகல் மரபே பின்னாளில் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறையாக மாறி குலதெய்வங்களாக உருவெடுத்தன என்கின்றனர் தொல்லியலாளர்கள்.
தமிழ்நாடெங்கும் பல்வேறு இடங்களில் 'தமிழக நடுகல் மரபு' என்னும் தலைப்பில் யாக்கை மரபு அறக்கட்டளை கண்காட்சி நடத்தி வருகிறது. உலக மரபு வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் உள்நுழைவுக் கட்டணமின்றி நடைபெறும், இந்த கண்காட்சியைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
'தமிழக நடுகல் மரபு' கண்காட்சி: நாய், கோழிக்கும் நடுகல் எடுத்த பண்டைத் தமிழரின் வாழ்வியல் மரபு இதுகுறித்து யாக்கை மரபு அறக்கட்டளையின் தன்னார்வலர் சுதாகர் நல்லியப்பன் கூறுகையில், 'இங்கு காட்சிப்படுத்தியுள்ள கல்வெட்டுகள் அனைத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். தமிழ்நாடு முழுவதும் 1200 நடுகற்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதில் 37 நடுகற்களின் புகைப்படம் மற்றும் அது குறித்த விளக்கங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இதேபோன்ற தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நடுகற்களும் பாதுகாக்கப்படுவதோடு ஆவணப்படுத்த வேண்டும், என்பதுதான் இந்தக் கண்காட்சியின் நோக்கம். இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடத்தினோம். அதைத் தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடத்தினோம். இந்தக் கண்காட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது' என்றார்.
மேலும் இந்தக் கண்காட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லின் முப்பரிமாண நகல் ஒன்று பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. அச்சு அசலாக உண்மையான கல்வெட்டை ஸ்கேன் செய்து, அதேபோன்று முப்பரிமாணத்தில் அச்சுப் பிரதி எடுத்து பார்வைக்கு வைத்துள்ளனர். அதே போன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வெட்டுகளையும் படியெடுத்து பாதுகாக்க வேண்டும் என்கின்றனர்.
யாக்கை மரபு அறக்கட்டளையின் அறங்காவலர் விக்கி கண்ணன் கூறுகையில், 'நடுகல் என்ற சொல் சங்க இலக்கியங்களில் குறிப்பாக தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஒரு நடுகல் அமைக்க என்ன மாதிரியான கற்களைத் தேர்வு செய்ய வேண்டும்? யாருக்கெல்லாம் நடுகல் எடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பிற சங்க இலக்கியங்களில் நடுகல் குறித்த பாடல்கள் பரவலாகக் காணப்படுகிறது. அவை வழிபாட்டுக்குரியவையாகவும் போற்றப்படுகின்றன. இதற்கான சான்றாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாதப்பட்டி, புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சங்க இலக்கியப் பாடல்களை உறுதி செய்கின்றன.
அந்த குறிப்பிட்ட நடுகல்லில் தமிழ் எழுத்துக்களே கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்களில் சொல்லக்கூடிய ஆநிரை கவர்தல் மற்றும் மீட்டல் போன்றவற்றிற்காக நடைபெற்ற சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்காக இந்த நடுகல் எழுப்பப்பட்டுள்ளன. சுமார் கிமு 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 10-ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்துள்ளது.
மேலும் இந்த நடுகல் முறை மக்கள் மரபாகும். அரசாங்கம் ஓலை வழியாகத் தருகின்ற ஒரு தகவலை, ஓலை நாயகம் என்பார். எழுதிய பிறகு அதனை பாறைகளில் பொறிப்பது ஒரு புரோட்டோகால் முறையாக இருந்துள்ளது. ஆனால், அதற்கெல்லாம் மாறாக, இந்த நடுகல் முறை மக்களின் மரபாக வளர்ந்து வந்துள்ளது என்பதுதான் குறிப்பிட வேண்டிய ஒன்று.
பின்னர் அவையே நாட்டார் தெய்வ வழிபாட்டு முறையாக மாறியது. 30-லிருந்து 40 சதவிகித கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் மக்களின் வழிபாட்டில் உள்ளது. மறைந்த தலைவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சிலை எழுப்புவதும்கூட இந்த மரபின் தொடர்ச்சியே' என்கிறார்.
கோழிச்சண்டைகளில் பங்கேற்று வெற்றி கண்ட வீரச்சேவல் ஒன்று காயம்பட்டு இறந்துவிட, நம் முன்னோர்கள் அதற்கொரு நடுகல் எழுப்பியுள்ளனர். இந்த கல்வெட்டு விழுப்பும் மாவட்டம் அரசலாபுரத்தில் உள்ளது. அதேபோன்று பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் 34-ஆவது ஆட்சியாண்டில் தங்கள் ஊரின் எருமைக்கூட்டங்களைக் கவர்ந்து செல்ல வந்த கள்வர்களை அவர்களின் திட்டம் நிறைவேற விடாமல் போராடித் தடுத்து தனது எஜமானருடன் சேர்ந்தே இறந்த ஒரு நாயின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் எடுத்தானூரில் கண்டறியப்பட்டது.
அதுபோன்ற நடுகற்களும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பல நூற்றாண்டு மரபின் தொடர்ச்சியாக இருந்து வருகின்ற நடுகல் மரபினை தமிழ்நாட்டு மக்களுக்கு அறியத் தருவதுடன் அவற்றின் பெருமிதங்களை இளைய தலைமுறையினருக்கும் கடத்திச் செல்லும் இந்த அரிய முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும்.
இதையும் படிங்க: மதுரை கல்லூரியில் ஈவ் டீஸிங் செய்தவர்கள் மீது குண்டாஸ்!