மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருவோர கடைகளில் இருந்து பணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தம் மார்ச் 15, 2023ஆம் ஆண்டு நடைபெற்று மயில் வாகனம் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறவில்லை எனவும்; இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜெயபாரத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதே நிலையில் மயில்வாகனம் ஏப்ரல் 19ஆம் தேதி ஒப்பந்தத்திற்கான பணத்தில் ரூபாய் 57,14,408 செலுத்தியதாகவும், மீதமுள்ள தொகையை ஜூன் 1, 2023-க்குள் கட்ட வேண்டும் என ராமநாதபுரம் நகராட்சி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மயில் வாகனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த 2 மனுக்களும் நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கூறுகையில்; ''மயில்வாகனம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள மீதித் தொகை ரூ.34,78,536 ஜூலை 5, 2023ல் கட்டியதால் அவருடைய வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தம் ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோரக் கடைகளுக்கான வாடகை வசூல் செய்வதற்கான உரிமத்திற்கானது என்பதால், ஒப்பந்த அறிவிப்பில் தெருவோரக் கடைகள் எந்த இடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் இடம்பெறவில்லை.
மேலும், வாடகை எவ்வளவு என்று விவரமும் இடம்பெறவில்லை. ஆனால், மிகப்பெரிய போட்டியின் நடுவே மயில்வாகனம் என்பவர், இந்த ஒப்பந்தத்தை ரூபாய் 91,92,944 செலுத்தி எடுத்துள்ளார். தெருவோர கடைகளுக்கான சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி ராமநாதபுரம் நகராட்சி தெருவோர கடைகளுக்கான இடம் மற்றும் தெருவோர கடைகள் இல்லாத இடம் எது என்பதை அடையாளம் காண வேண்டும்.
தெருவோரக் கடைகளை அதற்கான உரிய இடத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தெருவோரக் கடைகளுக்கான குழு அமைக்கப்பட வேண்டும். தெருவோரக் கடைகள் எத்தனை உள்ளது என்பதை வரையறை செய்ய வேண்டும். இது போல் எந்த நடைமுறையும் பின்பற்றாமல் ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோரக் கடைகளில் வாடகை வசூல் செய்வதற்கான ஒப்பந்தம் மயில் வாகனம் என்பவருக்கு விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராமநாதபுரம் நகராட்சியில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கடைகள் அமைத்துக் கொள்ளலாம். ஒப்பந்ததாரர் வாடகை எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பது போல் உள்ளது. இதேபோல் எத்தனை நகராட்சியில் ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை'' என நீதிபதி தெரிவித்தார்.
மேலும், பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார்: அவை பின்வருமாறு:
1) தெருவோரக் கடைகளுக்கான குழு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சியிலும் அமைக்கப்பட்டுள்ளதா?