அலங்காநல்லூர்(மதுரை):தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.டி.ஆர். பனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அலங்காநல்லூர் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் சூரி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
உடல் தேர்வு மூலம் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் காண தகுதி பெற்றனர். 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள வராத நிலையில் மற்ற வீரர்களை மருத்துவக் குழு தகுதி நீக்கம் செய்தது. மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியைத் துவக்கி வைத்தார். சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கிய நிலையில், சீறிப் பாயந்த காளைகளை அடக்க காளையர்கள் முனைப்புக் காட்டினர். மாடுபிடி வீரர்களின் கிடுக்குப்பிடியில் இருந்து தப்பியும், வீரர்களுக்கே சவால் விடும் வகையில் களமாடியும் சில காளைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட காளைகள் களமாடிய நிலையில், 10 சுற்றுகளாக போட்டி நீடித்தது. இதில் 303 மாடுபிடி வீரர்களும் 825 காளைகளும் களத்தில் இறங்கி விளையாடினர். மொத்தம் 53 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளை கட்டித் தழுவி அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், சைக்கிள், சலவை இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், கட்டில், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் அள்ளி வழங்கப்பட்டன.