மதுரை:ஜி.எஸ்.டி நெட்வொர்க் (GSTN) அமைப்பை அமலாக்கத்துறை நிர்வகிக்கும் பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது வணிகர்கள் நலனுக்கு எதிரானது என்றும் உடனடியாக இதை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் ரத்தினவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூலை 12) வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 'அமலாக்கத்துறை நிர்வகிக்கும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஜி.எஸ்.டி நெட்வொர்க்கை (GSTN) சேர்த்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு தமிழ்நாட்டிலுள்ள தொழில் வணிகத்துறை சார்பாக வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது வணிகர்களிடையே, குறிப்பாக நேர்மையாக வரி செலுத்தும் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜி.எஸ்.டி வரிச் சட்டம் (GST Tax Act) அமலான 2017 ஜூலை 1 முதல் தற்போது வரை நூற்றுக்கணக்கான சுற்றறிக்கைகள், திருத்தங்கள், கேள்வி பதில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை வரிச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளாலேயே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
தவறு செய்யாத வணிகர்களுக்கும் மிரட்டல்?:இவற்றை எல்லாம் புரிந்துகொண்டு வணிகம் செய்ய நம்நாட்டில் உள்ள பெரும்பாலும் உயர்கல்வி பயிலாத வணிகர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் Technical Mistake என்று சொல்லக்கூடிய நுட்பமான தவறுகளுக்கும் கூட கடுமையான அபராதங்கள் விதிக்க சரக்கு வாகனங்களை சோதனையிடும் 'ரோவிங் ஸ்குவாட்' (Roving squad) அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்யாத வணிகர்களும் மிரட்டப்படுவதாகப் புகார்கள் வருகின்றன. லஞ்சத்தின் ஊற்றுக்கண்ணாக இந்த நடைமுறைகள் உள்ளன.வணிக நடைமுறை எதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல் ஜி.எஸ்.டி விதிகள் இயற்றப்படுகின்றன. விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
வருமான இல்லாதபோதும் வரி கட்டுவோருக்கும் வந்த சோதனை:இதற்குக் காரணம் மாதத்திற்கு சுமார் ரூ.1.6 லட்சம் கோடி வரிப்பணத்தை, எந்தவித ஊதியமும் இல்லாமல், வரித் தொகை வசூலானாலும், வசூலாகாவிட்டாலும் தங்கள் கையிலிருந்து செலுத்தி மத்திய மாநில அரசுகளை இயங்கச் செய்யும் தொழில் வணிகத்துறையினரை மத்திய அரசு கலந்து பேசுவதில்லை. தவறான, குழப்பமான அமலாக்கத்தினால் நல்ல ஒரு வரிமுறை சட்டம் மக்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. ஜி.எஸ்.டி சட்ட விதிகளில் தெளிவு இல்லை; குழப்பம் தான் அதிகம் உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டு தான் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் (GST Council Meeting) இதுவரை 50 முறை நடைபெற்றிருப்பது. இந்தியாவில் உள்ள எந்த வரிச் சட்டத்திற்காகவும் இது போன்று கூட்டங்கள் நடைபெற்றதில்லை.