மதுரை:திருச்சி அரியமங்கலம் பகுதியைச்சேர்ந்த சதீஷ் குமார், சங்கர் ஆகியோர் ஒரு கொலை வழக்கில் 06.11.2017 அன்று திருச்சி 3ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வழங்கிய தண்டனையை ரத்து செய்ய கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரணை செய்த நீதிபதிகள் கொலை குற்றங்களை சட்டம் ஒழுங்கு போலீசாரே விசாரிப்பதால், வேலை பளுவால் விசாரணையைத் தொய்வின்றி, தீவிரமாக நடத்த சட்டம் ஒழுங்கு போலீசாரால் இயலவில்லை. எனவே, கொலைக்குற்றங்களை விசாரிப்பதற்கு காவல் துறையில் புதிதாக தனி பிரிவை உருவாக்க வேண்டும் எனவும்; இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறைத்தலைவர் (DGP) விரிவான பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ’நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில் கொலை, கொள்ளை, மர்ம சாவு, கடத்தல் வழக்கு, பெரிய விபத்துகள் சாதி, மதம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் கொடூர குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி நடத்தப்பட உள்ளது.