மதுரை:உதகை மலை ரயில் அண்மையில் தன்னுடைய சேவையை கரோனா ஊரடங்கிற்குப் பின்பு தொடங்கியது. முன்பு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ரயிலின் கட்டணம் தற்போது அதிகரித்துள்ளது. மலை ரயிலை தனியாருக்கு தாரை வார்த்ததே இதற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " உதகை மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அதன் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, 3ஆயிரம் ரூபாயாக உள்ள கட்டணம் மார்ச் முதல் ஜூலை வரையிலான சீசன் காலத்தில் 12ஆயிரம் ரூபாய்வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே டார்ஜிலிங் மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.
இந்தியா முழுவதும் 150 ரயில்கள் தனியாருக்கு கொடுக்க அட்டவணை வெளியிடப்பட்டு ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டன. இதில், தென்னக ரயில்வேயின் 26 ரயில்கள் அடக்கம். தாம்பரம் முதல் கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில்கள் இப்பட்டியலில் உள்ளன.