தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1000 கோடி ரூபாய் நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்- சு.வெங்கடேசன் - எம்பி வெங்கடேசன்

மதுரை: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூலி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய 1000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெங்கடேசன் எம்பி
வெங்கடேசன் எம்பி

By

Published : Apr 2, 2020, 7:59 AM IST

மதுரை மக்களவை உறுப்பினர் திரு வெங்கடேசன் மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கூலி நிலுவை ரூபாய் 1000 கோடியை உடனடியாக வழங்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கோவிட்-19, இந்தியா முழுமையும் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்க்கையைத் தலைகுப்புறப் புரட்டிப் போட்டிருக்கிற வேளை இது. கடும் நெருக்கடி மூழ்கடிக்கிற நிலையிலும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் குரூரமான வஞ்சனைக்கு உள்ளாக்கப்படுவதை அதிர்ச்சியோடும் அக்கறையோடும் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

இரண்டு நாள்களாக இந்தியா முழுவதும் நகர்ப்புற அமைப்புசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கிற அவலங்கள் எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றன. அரசின் எந்த அறிவிப்பும் நிவாரணமும் எட்டாத நிலையில் அவர்கள் பல்லாயிரக்கணக்கில் பல நூறு கிலோ மீட்டர்களைக் கடந்து சொந்த மாநிலங்களுக்கு, சொந்த ஊர்களுக்குக் கால்நடையாகவே திரும்புகிற துயரத்தை நாடு கண்டு வருகிறது. இப்பின்புலத்தில் இந்திய பிரதமரே, " என்னை மன்னித்துவிடுங்கள்" என்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இதே நிலைமை கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்திற்கான எல்லா வழிகளும் அடைபட்டுள்ள சூழலில் மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தின் கூலி இரண்டரை மாதங்களாக வழங்கப்படவில்லை என்பது அநீதி அல்லவா?

தமிழ்நாட்டில் ஜனவரி 13ஆம் நாளிலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலிபாக்கி 671 கோடி ரூபாய்; பொருளாகத் தரவேண்டிய பாக்கி 300 கோடி ரூபாய், மொத்தம் 1000 கோடி ரூபாயை தொடுகிறது. இதுநாள் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி வந்து சேரவில்லை. ஒரு புறம் நாள்கூலி ரூ.20 உயரும் என்ற அறிவிப்பு. மறுபக்கம் செய்த வேலைக்கு கூலி இரண்டரை மாத பாக்கி என்பது வேதனையான முரண் அல்லவா? வேலை அட்டை வைத்திருப்பவர்களில் 7 சதவீதம் பேருக்கே 100 நாள்களும் வேலை கிடைக்கிறது என்ற வழக்கமாக உள்ள வஞ்சனை.

தற்போது இவ்வளவு நெருக்கடி மிக்க காலத்திலும் கூலிபாக்கிக்கு அவர்களை அல்லாடவிடுவது மிகக்கொடூரம் அல்லவா? இதற்காக ஓர் மன்னிப்பை இந்திய பிரதமர் கேட்கிற நிலைமை வரக்கூடாது எனக் கருதுகிறேன். வெறும் வார்த்தைகள் போதாது. அவற்றால் பசித்த வயிறு நிரப்பாது. உங்களின் உடனடிக் கவனம் தேவைப்படுகிற பிரச்சினை இது. ஏழை, எளிய மக்களின் உயிர்வாழ்கிற உரிமை குறித்த ஒன்று. தமிழகக் கிராம உழைப்பாளி மக்களுக்கு நிலுவையாக உள்ள 1000 கோடி ரூபாயை இனியும் காலவிரயம் இன்றி உடனே அனுப்பிவைத்து கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு நீதி வழங்குமாறு வேண்டுகிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'களைக்கட்டட்டும் வீடு கற்பனைத் திறத்தோடு' - மதுரை எம்பியின் ஏற்பாட்டில் கலை இலக்கியப் போட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details