மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராடிவருகின்றனர். நேற்று இரவு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்ட பின், பல்வேறு தரப்பினர் மத்தியிலும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அனைத்திந்திய மாணவர் சங்க அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக கோவை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேவ் டெமாக்ரசி, சேவ் எஜுகேசன் என முழக்கங்கள் எழுப்பியதோடு, குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர். அதையடுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் உட்பட 47 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.