சமீபகாலமாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா, அபின் உள்ளிட்டவற்றை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு அதிவேக நவீன ரோந்து படகுகள் வழங்கப்பட்டன.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அதிவேக ரோந்து படகு கண்காணிப்பு பணி தொடக்கம் இதற்கிடையே, நாகப்பட்டினம் முதல் கோடியக்கரை வரை உள்ள கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வழங்கப்பட்ட 2 அதிநவீன படகுகள் சில மாதங்களாக பழுதடைந்து நாகப்பட்டினம் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று அந்த இரண்டு அதிவேக நவீன படகுகள் 48 லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டு, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் அதில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் கலிதீர்த்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கடத்தல் சம்பவங்களைத் தடுக்க கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் நாள்தோறும் நாகப்பட்டினம் முதல் வேளாங்கண்ணி வரை ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இப்பணியை மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் விரிவுபடுத்த உள்ளோம்’ என்றார்.