இது குறித்து இன்று (ஜூன்.08) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வணிகத்தில் ஈடுபடாத சில அமைப்புகள், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் வரி செலுத்தும் நபராகப் பதிவு செய்து அதன்மூலம் சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல், போலிப் பட்டியல்கள் மூலம் பயனாளிகளுக்கு மோசடியாக உள்ளீட்டு வரி வரவை மாற்றுவது தமிழ்நாடு வணிகவரித் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்தப் பயனாளர்கள் இதுபோன்ற பொய்யான பரிவர்த்தனைகளில் உள்ளீட்டு வரி வரவு எடுப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். போலி பட்டியல்கள் வழங்குதல், அதற்கு எவ்வகையிலேனும் உடந்தையாக இருத்தல், போலி பட்டியல்கள் மீது உள்ளீட்டு வரி வரவு எடுத்தல் ஆகியவை தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017இன்படி அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்.