நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டிற்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2500 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் 24 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன
இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கு இந்தியாவிலிருந்து மொத்தம் 292 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 13 போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 19 பேர் கலந்துகொண்டனர்.
இவர்களில் மதுரை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 8 பேர் கலந்துகொண்டனர். குறிப்பாக மதுரை சிக்கந்தர் சாவடியில் அமைந்துள்ள ’பெத்சான்’ சிறப்பு பள்ளியில் இருந்து 6 விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஒரே பள்ளியில் இருந்து சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பு ஒலிம்பிக்கில் 72 தங்கம், 99 வெள்ளி, மற்றும் 96 வெண்கல பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட வீரர்கள் தடகளம், நீச்சல் போட்டி, இறகுப்பந்து, ரோலர் ஸ்கேட்டிங், கூடைப்பந்து, பளு தூக்குதல், மற்றும் கால்பந்து போன்ற போட்டிகளில் முறையே மூன்று தங்கம் 17 வெள்ளி ஆறு வெண்கலப்பதக்கங்கள் உட்பட 26 பதக்கங்களை வென்றுள்ளனர்.
பெத்சான் பள்ளியிலிருந்து கலந்துகொண்ட திவ்யபாரதி இறகுப்பந்து ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும், அதே போட்டியில் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.