தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நீர்நிலைகள் சீரமைப்பு அவசியம்' - நீரியல் வல்லுநர் முனைவர் இரா. சீனிவாசன் - World Water Day

உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகின்ற பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நீர்நிலைகளைச் சீரமைத்து உரிய வகையில் பயன்படுத்துவதுதான் ஒரே தீர்வு என்று நீரியல் வல்லுநர் முனைவர் இரா. சீனிவாசன் கூறுகிறார்.

Special Interview with Hydrologist Srinivasan for World Water Day
Special Interview with Hydrologist Srinivasan for World Water Day

By

Published : Mar 22, 2020, 11:19 PM IST

உலக தண்ணீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், 'தண்ணீரும் பருவநிலை மாற்றமும்' என்பது இந்த ஆண்டின் தண்ணீர் தின முழக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தண்ணீர் மற்றும் நீர்நிலைகளின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் என்பதை இந்த முழக்கம் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து நீரியல் வல்லுநரும், பிரதான் என்ற நிறுவனத்தின் திட்டத் தலைவருமான முனைவர் இரா. சீனிவாசனை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், ”உலகில் இதுவரை நிலவிவந்த தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே பருவநிலை மாற்றம் என்கிறோம். இதற்கு மனிதர்களின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். இதன் விளைவாக பூமத்திய ரேகையை (Equator) ஒட்டியுள்ள அனைத்து நாடுகளின், சூழலியலில் மிகப்பெரும் விளைவு ஏற்படத் தொடங்கியுள்ளது. பூமியின் துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கியிருப்பதும், இதன் காரணமாக கடலோர நாடுகள் கடலுக்குள் மூழ்க நேரிடுவதும் தான் பருவநிலை மாற்றத்தின் முதற்கட்ட விளைவாகும்.

நீரியல் வல்லுநர் முனைவர் இரா.சீனிவாசன்

வழக்கமாய் உள்ள வெப்ப அளவை விட கடந்த 200 ஆண்டுகளில் 2 பாரன்ஹீட் அளவிற்கு சராசரி வெப்பம் உயர்ந்துள்ளது. இதுதான் பருவநிலை மாற்றத்தின் மிக முக்கியத்துவமான கூறாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மனிதர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் உடனடியாகப் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்றாவது மிக முக்கியமாக, பூமத்திய ரேகைக்குத் தென்பகுதியில் இருக்கக் கூடிய இந்தியா, அதிலும் குறிப்பாக தென்னிந்தியப் பகுதிகளில் மழைப்பொழிவு மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. மழை பொழியக்கூடிய பருவம், நேரம் உள்ளிட்டவற்றைக் கணக்கிடும்போது அது குறைந்து கொண்டே வருவதை நாம் உணர முடிகிறது” என்றார்.

இதையும் படிங்க:'எதிர்பார்த்ததை விட பருவநிலை வேகமாக இருக்கிறது' - ஐநா பொதுச்செயலாளர் வருத்தம்

”ஒட்டுமொத்த தென்னிந்தியப் பகுதிகளில் பொழியக்கூடிய மழையின் சராசரி அளவு கூடியிருக்கிறது. இருந்தாலும் அது பொழியக்கூடிய நாள்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக வேளாண்மை செழித்திருந்த இந்தியாவில் தற்போது மழைப்பொழிவின் சமமின்மை காரணமாக வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. பருவகாலச் சமநிலை குலையத் தொடங்கியதால், பாரம்பரிய அறிவோடு உழவு செய்து வாழ்ந்த வேளாண்குடிகள் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பன போன்ற பழமொழிகளெல்லாம் அவர்களின் பல்லாண்டு கால அனுபவத்தின் விளைவாக உருவானவையே.

ஓராண்டில் சராசரியாகப் பெய்யக்கூடிய மழை சற்று முன் பின் இருந்தாலும், பொழிகின்ற நாள்களில் ஏற்பட்ட சீரற்ற தன்மையின் காரணமாக, அந்த மழைநீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தக்கூடிய அளவில் போதுமான நீர்நிலைகள் இல்லை. தமிழ்நாட்டில் 40 ஆயிரம் ஏரிகளும், சுமார் 2 லட்சம் ஊருணி, குளம் போன்ற சிறிய நீர்நிலைகளும் இருப்பதாக புள்ளிவவிவரங்கள் சொல்கின்றன. இந்த அடிப்படையில் 1960ஆம் ஆண்டிலேயே ஒரு மில்லியன் ஹெக்டேர் பாசன நிலங்கள் ஏரி நீரால் பாசனம் பெற்றன. 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே பாதி அளவாகக் குறைந்துவிட்டன. ஏரிகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும் அல்லது பல்வேறு காரணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாலும் அந்த நீரை நம்பியிருந்த பாசன நிலங்கள் குறைந்துபோய்விட்டன” என்கிறார் சீனிவாசன்.

நீரியல் வல்லுநர் முனைவர் இரா.சீனிவாசன்

கிணற்றுப் பாசனம் சார்ந்த தமிழ்நாடு உழவர்களின் விவசாயம் குறித்து அவர் பேசும்போது, ”தக்காண பீடபூமியை (Deccan Plateau) ஒட்டியுள்ள தென்பகுதி நிலம், உலகின் மிகப்பழமையான ஒன்றாகும். இங்குள்ள நிலங்களுக்குக் கீழே கடினப்பாறைகளே உள்ளன. இவற்றில்தான் தண்ணீரைத் தேக்க வேண்டிய நிலை. கிணற்றுப் பாசனத்தை நம்பி வாழ்கின்ற விவசாயிகளுக்கு இதுபோன்ற நீராதாரங்களே வாய்ப்பு. ஆகையால் இதுபோன்ற நிலப் பகுதிகளில் அமைந்த நீர்நிலைகளில் தரைக்கு மேலே அதிகப்படியான நாள்கள் நீர் தேங்க வேண்டும்.

அப்போதுதான் கிணற்றுப் பாசனம் தங்கு தடையின்றி நடைபெறும். இதன் காரணமாக கிணற்றுப் பாசனமும் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் குடிநீர்த் தேவையை சுமார் 60லிருந்து 80 சதவிகிதம் வரை கிணறுகளே பூர்த்தி செய்கின்றன. நிலத்தடி நீர் தொடர்ந்து கீழ் நோக்கிச் சென்று கொண்டிருப்பது மற்றொரு பேரிடராகும். பல்லாண்டு காலமாக இந்த நிலம் சேமித்து வைத்திருந்த நீரை நாம் இப்போது வரைமுறையின்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

இதற்குத் தீர்வு சொல்லும் அவர், ”பருவநிலை மாற்றம் என்பதைத் தனிப்பட்ட நிகழ்வாகப் பார்க்கக்கூடாது. அதனை வெல்வதற்கான ஒரே தீர்வு, நம் முன்னோர்கள் உருவாக்கிய நீர்நிலைகளை மிகச் சிறப்பாக பேணுவதே. அதேபோன்று பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை நகர்ப்புறங்களும் எதிர்கொள்ள நேரிடுவதால், அங்குள்ள நீர்நிலைகளை சரியான முறையில் நிர்வகிப்பதும் அவசியம். மதுரை போன்ற பெருநகரங்களில் தற்போது எஞ்சியுள்ள நீர்நிலைகளைக் காப்பாற்றுவதுடன், அதில் சிறந்த நீர் மேலாண்மையைப் பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்” என்று கூறுகிறார்.

நீரியல் வல்லுநர் முனைவர் இரா. சீனிவாசன்

தண்ணீர் விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்ட சூழலில், ஒவ்வொரு துளி நீரும் மிக மிக மதிப்பு வாய்ந்தது. அதனை வீட்டுப் பயன்பாட்டிலிருந்து பொதுப் பயன்பாடு வரை எந்தளவிற்கு சிக்கனமாகவும், சிறப்பாகவும் கையாள வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டின் தண்ணீர் தின சாராம்சம் என்றே கூறலாம்...!

இதையும் படிங்க:உலகத் தலைவர்களைத் தெறிக்கவிடும் கிரேட்டா!

ABOUT THE AUTHOR

...view details