மதுரை:சரஸ்வதி பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்ததுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “காரைக்குடி சிறப்பு ரயில் (06039), டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, அக்டோபர் 22 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.30 மணிக்கு காரைக்குடி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06040), அக்டோபர் 23 அன்று காரைக்குடியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுக சந்திப்பு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள், இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், நான்கு குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஆறு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.