சமூக அக்கறையுள்ள நபர்கள் ஆங்காங்கே தங்களால் இயன்ற பணிகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் தான் வெளியே தெரிகின்றனர். அதுபோன்று மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது மிதிவண்டியின் மூலமாக மதுரை மானகிரி, மேலமடை, கேகேநகர், அண்ணாநகர், காந்திநகர், மதிச்சியம் ஆகிய பகுதிகளில் சோப் ஆயிலுடன் தானே தயாரித்த பினாயிலையும் விற்பனை செய்து வருகிறார்.
தனது மிதிவண்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி மூலமாக தன்னுடைய பொருட்களை விற்பனை செய்வதோடு, அவ்வப்போது அதன் மூலம் சாலைப் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், வீடுகளில் மரங்கள் இருப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் மேம்பாடு, வீட்டைச்சுற்றி தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கரோனா பெருந்தொற்றைக் கருத்திற் கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் என பல்வேறு விழிப்புணர்வு சார்ந்த தகவல்களையும் பரப்புரை செய்கிறார்.
இதுகுறித்து தர்மராஜ் கூறுகையில், 'சக்கிமங்கலத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு மதுரை நகர்ப்புறங்களில் சோப் ஆயில், பினாயில் பாட்டில்களுடன் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறேன். இதனைக் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்கிறேன். இது என் பிழைப்பு என்றாலும், இந்தத் தொழிலோடு பொதுமக்கள் ஆரோக்கியத்தோடும், விழிப்புணர்வோடும் வாழ வேண்டும் என்பதற்காக கரோனா குறித்து நமது அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன்.
சமூக இடைவெளியைப் பின்பற்றுவதோடு, முகக்கவசம் அணிவதையும் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதேபோன்று சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்துகிறேன். தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும் எடுத்துக் கூறுகிறேன்.