தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவாலயங்களாய் திகழும் அருங்காட்சியகங்கள் - சர்வதேச அருங்காட்சியக தின சிறப்புக் கட்டுரை! - madurai news

சர்வதேச அருங்காட்சியகங்களுக்கான 45வது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில், மதுரையில் உள்ள அருங்காட்சியகங்களின் பணிகளை நினைவு கூர்வோம்.

மதுரை அருங்காட்சியகத்துக்கும் பேமஸ்தான்.. சர்வதேச அருங்காட்சியக தினம் சிறப்பு பார்வை
மதுரை அருங்காட்சியகத்துக்கும் பேமஸ்தான்.. சர்வதேச அருங்காட்சியக தினம் சிறப்பு பார்வை

By

Published : May 18, 2023, 1:27 PM IST

சர்வதேச அருங்காட்சியக தினம் சிறப்பு செய்தித் தொகுப்பு

மதுரை:அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில், உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்ற அமைப்பு 2ஆம் உலகப்போர் நடைபெறுவதற்கு சற்று முன்பு உருவாக்கப்பட்டது. உலகிலுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் இந்த அமைப்புடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.

கடந்த 1978ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த 1851ஆம் ஆண்டு சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல் அருங்காட்சியகம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

மெட்ராஸ் லிட்ரரி சொஷைட்டியின் பெரு முயற்சியால் உருவான இந்த அருங்காட்சியகம், இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விரிவடைந்துள்ளது என்பதே இதன் வளர்ச்சி வேகத்தைக் காட்டும். சென்னைக்கு அடுத்தபடியாக கலாசாரத்தின் தலைநகராக கருதப்படுகிற மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை அரசு அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகம், சங்கத் தமிழ் காட்சிக்கூடம் ஆகியவற்றோடு, அண்மையில் மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்தில் திறக்கப்பட்ட கீழடி கள அருங்காட்சியகம் என அருங்காட்சியகங்கள் நிறைந்த நகராக மதுரை திகழ்கிறது.

இது குறித்து மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “ஒரு நாடு மிகச் சிறந்த பண்பாட்டு எச்சங்களைக் கொண்டிருக்கிறது என்றால், அது வளமையான நாடாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் அரசர் மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கும்போது, குறிப்பிட்ட நாட்டின் கலைப் பொக்கிஷங்களை கவர்வதுதான் முதன்மை நோக்கமாக இருக்கும்.

ராஜேந்திரச் சோழன் கங்கையின் மீது படையெடுத்தான். கங்கைக் காளியை அங்கிருந்து கவர்ந்து, தஞ்சாவூரிலுள்ள மாளிகை மேடு என்ற இடத்தில் நிறுவினான். கங்கைப் பகுதியை ஆண்ட அரசர்களுக்கு இது இழிவான செயலாகும். தங்கள் நாட்டின் பண்பாட்டை, கலாசாரத்தை ஒரு நாடு பாதுகாத்து வருகிறதென்றால், உன்னதமான, மிகச் சிறப்பான நாடாக அது கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் பண்பாடு, கலாசார, கலைப் பொக்கிஷங்கள் அழிந்துவிட்டால், அந்த நாடே அழிந்ததற்கு ஒப்பாகும். அந்த வகையில் இந்திய நாடு தனது கலாசாரத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. அந்தப் பெருமை மத்தியில் ஆளுகின்ற அரசுகளுக்கும், மாநில அரசுகளுக்கும் உண்டு.

அந்தந்த மாநிலங்கள் தங்களது பண்பாட்டை, கலாசாரத்தைப் பாதுகாக்க பல்வேறு அருங்காட்சியகங்களை அமைத்துள்ளதை நாம் பார்க்கிறோம். தமிழ்நாடு, அதற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்பதற்கு அண்மைக்கால உதாரணம், கீழடி கள அருங்காட்சியகம். மதுரை மாவட்டத்தில் அருங்காட்சியகங்கள் அருகருகே நிறைய உள்ளன.

ஒவ்வொரு அருங்காட்சியகமும் தனித்தன்மை வாய்ந்தவையாகும். மதுரை அரசு அருங்காட்சியகத்தைப் பொறுத்தவரை, மதுரைப் பகுதியில் கிடைக்கப் பெற்ற பழமையான பொருட்கள் மற்றும் பண்பாட்டைப் பேணிப் பாதுகாக்கும் கலைப் பொக்கிஷங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக சேகரித்து, கடந்த 1981ஆம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது.

நமக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு வகையான ஐம்பொன் சிலைகள், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள்கள், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சூதுபவள மணிகள், நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைப் பொருட்கள் மற்றும் பழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள், ஓலைச்சுவடிகள், மரச்சிற்பங்கள் ஆகியவை இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்குள்ள நடராஜர் சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததாகும். தேவாரப் பாடல்களில் கூறுவதைப் போன்று 'குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும்' என்ற அடிகளுக்கு ஏற்ப இந்த செப்புத் திருமேனி அமைந்துள்ளது. ராஜேந்திர சோழன் கங்கை மீதான படையெடுப்புக்கு முன்பு வரை நடராஜர் தலை மேல் கங்கை கிடையாது.

கங்கையை வெற்றி கொண்ட பிறகு உருவான நடராஜர் செப்புத் திருமேனியின் தலையில் கங்கை இருப்பது போன்ற உருவாக்கம் செய்யப்பட்டது. ஆகவே, ஒரு நாட்டின் மன்னன், தான் பெற்ற வெற்றிகளை தனது தெய்வத்தின் மீது ஏற்றி வைப்பது ஒரு மரபாக இருந்துள்ளது. அதேபோன்று கால் மாறி ஆடக்கூடிய நடராஜர் உருவம்தான் மதுரை என்றதும் நினைவுக்கு வரும்.

இலக்கியங்களின் வாயிலாக நிறைய சான்றுகள் கிடைத்தாலும், மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகே உள்ள பொறுப்பு மேட்டுப்பட்டியில் கால் மாறி ஆடிய நிலையில் நடராஜர் சிற்பம் நமக்குக் கிடைத்துள்ளது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சோழர்களின் குலதெய்வமாக வழிபாடு செய்யப்பட்டார்.

குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் சோழர்களின் குலதெய்வமாகவே வழிபடப்பட்டார். அதன் காரணமாக சோழ மன்னர்கள், தாங்கள் பட்டமேற்பதை சிதம்பரத்திலேயே மேற்கொண்டனர். இத்தனை சிறப்பு வாய்ந்த நடராஜர் சிற்பங்களை அருகில் சென்று பார்ப்பது இயலாது. ஆனால், மதுரை அரசு அருங்காட்சியகத்தில் அதனை அருகிலிருந்து ரசிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டதாகும். ஐம்பொன் சிலை வல்லுநர்கள் உலகளவில் தமிழர்கள்தான் என்று மார் தட்டி நாம் பெருமை கொள்ளலாம். இதற்கான சான்றுகள் நிறைய நமக்கு கிடைத்துள்ளன. சோழ நாட்டில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் நமக்குக் கிடைத்துள்ளன. தற்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

பாண்டிய நாட்டிலும் கிடைத்து வருகின்றன. நடராஜர் திருமேனி குறித்து அனந்தகுமார சாமி பதிவு செய்துள்ளார். சிவன் ஆடும் கூத்து, சிவகாமி ஆடும் கூத்து என்று குறிப்பிட்டு எங்கெல்லாம் நடராஜர் நடனமாடுகிறாரோ, அங்கெல்லாம் சிவகாமியின் சிற்பமும் கிடைத்துள்ளது.

குறிப்பாக, இந்த நடராஜர் நடனம் என்பது சிறுதெய்வ வழிபாட்டில் உள்ள மரபுகளைத் தாங்கி பெருந்தெய்வ நிலைக்குள்ளாக கொண்டு வந்திருப்பதை உணர முடியும். கொற்றவை மிகச் சிறந்த நடன தெய்வம். இந்த கொற்றவைக் கூத்தே பிற்காலத்தில் நடராஜர் திருமேனியில் ஏற்றியிருக்கலாம் என்பது அனந்த குமாரசாமியின் ஆய்வுக் கூற்று.

இது போன்ற விஷயங்களை எல்லாம் அருகில் இருந்து கண்டு களிப்பதற்கு அருங்காட்சியகங்களே மிகச் சிறந்த கல்விக் கூடங்கள். தமிழ்நாடு அரசு, தற்போது மாவட்டந்தோறும் அரசு அருங்காட்சியகங்கள் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அருங்காட்சியகங்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது.

மதுரை மாவட்ட அருங்காட்சியகத்திற்கும் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய வரலாறு என்ன என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு இது போன்ற முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

தேனி, திருவண்ணாமலை, அரியலூர் புதை உயிரிப்படிம அருங்காட்சியகம், விழுப்புரம், தூத்துக்குடி, நாமக்கல் மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் புதிய அருங்காட்சியகங்கள் வர உள்ளன” எனக் கூறினார்.

மேலும், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அக்ஷயா கூறுகையில், “கோடை விடுமுறைக்காக நாங்கள் மதுரைக்கு வந்தோம். மதுரை தூங்கா நகரம் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்குள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பிறகு, அதன் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிப்பருவத்தில் படித்த பாடங்கள் எல்லாம் இங்கே காட்சியாக இருப்பதைப் பார்த்து உணர்ந்தோம்.

இதன் மூலம் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நினைவில் கொள்வதும் எளிதாகிறது'’ என்றார்.

அதேபோல், சென்னையைச் சேர்ந்த பிரியா கூறுகையில், “நான் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். வரலாற்றுப் பாடங்களை நடத்துவதை விட, அவர்களை அழைத்து வந்து இது போன்ற அருங்காட்சியகங்களைப் பார்வையிடச் செய்வதன் மூலம் எளிதாக அவர்களுக்கு உணர்த்த முடியும்.

நேரடியாகப் பார்க்கும் குழந்தைகளுக்கு அதன் தனித்தன்மையை ஆழமாக உணர முடியும். ஆகையால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பயனுள்ள முறையில் அவர்களுக்கான கற்றலை, அருங்காட்சியகங்களை பார்வையிட செய்வதன் மூலம் ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இரும்பால் ஆன நங்கூரம் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details