மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான 15 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். விடுதியில் மகள் தங்கி படிப்பதால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
ஆனால் மாணவி தனது செல்போனில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பதிவேற்றம் செய்து அதிலேயே மூழ்கினார். இந்நிலையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அல்ஹசனுடன் (19) பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் தொடர்ந்ததையடுத்து அல்ஹசன் மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
தொடர்ந்து அல்ஹசன் மாணவியிடம், 'உன்னை தனிமையில் சந்திக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். அதைநம்பி மாணவி விடுதியில் உள்ள வார்டனிடம் பொய் சொல்லிவிட்டு வெளியே வந்துள்ளார். இதனையடுத்து அல்ஹசனும் மாணவியும் சேலம், நாமக்கல் எனச் சுற்றி பார்த்துவிட்டு இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
பின்னர் அல்ஹசன் மாணவியுடன் தனியாக இருந்த புகைப்படங்களை வைத்து, 'நான் கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டும், இல்லை என்றால் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன்' என மிரட்டியுள்ளார். அல்ஹசன் கூறியதைக் கேட்டு பயந்துபோன மாணவி அடிக்கடி வார்டனிடம் பொய் சொல்லி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு அல்ஹசன் மாணவியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை மாணவி தொடர்ந்து வெளியே செல்வதால் சந்தேகமடைந்த வார்டன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனடிப்படையில் பெற்றோர் மாணவியை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மாணவி அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு ஆடிப்போன மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அல்ஹசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் போக்சோவில் கைது!