முதுநிலை அஞ்சல் அலுவலர் மீனாட்சி மதுரை:ஒரு காலத்தில் கடிதங்கள் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்த அஞ்சலகங்கள், இன்றைக்கு சேமிப்பு, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களோடு மக்களுக்கான வங்கிச் சேவையில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. ஆனால், அது குறித்த முழுமையான தகவல்கள் பொதுமக்களை இன்னும் சென்று சேரவில்லை.
இது குறித்து மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நிலையில், மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் முதுநிலை அஞ்சல் அலுவலராகப் பணியாற்றும் மீனாட்சி, ஈடிவி பாரத் வாசகர்களுக்காக சிறப்பு நேர்காணல் வழங்கினார். இனி அவர் நேர்காணலில் கூறியதைப் பற்றி பார்க்கலாம்.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் (Postal saving Schemes):அஞ்சலக சேமிப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிற சேமிப்புத் திட்டங்களைப் போன்று மிக விரிவான தன்மையைக் கொண்டதாகும். பொதுவாக அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு (SB), தொடர் வைப்புக் கணக்கு (RD), கால வைப்புக் கணக்கு (Time Deposit) ஆகியவை மட்டுமே உள்ளதாக பொதுப் பார்வைக்கு தெரியும். ஆனால், நமது அரசு, மக்களுக்காகவே பல்வேறு வகையான கணக்குகளை அறிமுகப்படுத்தி உள்ளது. முதியோர், பெண்கள், குழந்தைகள் பயன்படும் வகையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளன.
மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரம் (Mahila Samman Savings Certificate):முதியோருக்கான சேமிப்புக் கணக்கு, மாதாந்திர வருமானத் திட்டம் ஆகியவற்றுடன் தற்போது பெண்கள் பயன்பெறும் வகையில் (MSSC) மகளிர் சம்மான் சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளிலிருந்து முதியோர் வரை, வயது பாகுபாடின்றி அனைத்துப் பெண்களும் இந்தக் கணக்கைத் துவங்கலாம். வருகின்ற 2025-ஆம் ஆண்டு வரை இந்தக் கணக்கு செல்லும். அதிகபட்சம் 2 லட்சம் வரை சேமிப்புச் செய்ய இயலும், இத்திட்டத்திற்கு 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
“மகளிர் சம்மான் சேமிப்புப் பத்திரம் தொடர்பாக பொதுமக்களிடம் அதிக விழிப்புணர்வு இல்லாததால், மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலையத்தைப் பொறுத்தவரை, பெண்களுக்கான இந்த சேமிப்புக் கணக்கில் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுகிறது. இந்தக் கிளையில் மட்டும் 20 சிறு சேமிப்பு முகவர்கள் உள்ளனர்.
நிறைய பொதுமக்களிடம் இந்தக் கணக்கு விபரங்கள் சென்று சேர விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தியுள்ளோம். ஒவ்வொருவரும் 100 அல்லது 200 பேரிடம் இந்தத் தகவலைக் கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளோம். தல்லாகுளம் கிளையில் மட்டும் குறைந்தபட்சம் ஆயிரம் கணக்குகள் துவங்கப்பட வேண்டும் என்பதை இலக்காக வைத்து இயங்கி வருகிறோம். இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது” என்று முதுநிலை அஞ்சல் அலுவலர் மீனாட்சி கூறினார்.
இது மட்டுமில்லாமல், பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ கணக்கும் (Sukanya Samriddhi Account Scheme), ஆண் குழந்தைளுக்கு ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ ஆகியவை உள்ளன. முதலீட்டிற்கு மிக நம்பகமான அஞ்சல் துறை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நல்ல வட்டி வழங்குகிறது. இதில் பொதுமக்கள் இணைந்து பயன் பெற வேண்டும்.
காப்பீடு (Insurance):காப்பீட்டைப் பொறுத்தவரை, அஞ்சலக ஆயுள் காப்பீடு (Postal Life Insurance), அஞ்சலக கிராமப்புற ஆயுள் காப்பீடு (Rural Postal Life Insurance) என இரண்டு விதமான காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. மற்ற தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தருகின்ற வசதி மற்றும் சலுகைகளை விட, அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் அதிகம் மட்டுமன்றி உத்தரவாதமானதும் கூட. தற்போது நெட் பேங்கிங் முறையில் முதிர்வுத் தொகை முழுவதுமாக மக்கள் கைகளிலேயே கிடைக்கும் வகையில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக அஞ்சலகங்களில் நிலவிய வாடிக்கையாளர் கையெழுத்தில் சிறிய மாற்றமென்றாலும் சிக்கல் என்ற நிலையெல்லாம் இப்போது கிடையாது. அதுமட்டுமன்றி, ஏடிஎம் (ATM), மொபைல் பேங்கிங் (Mobile banking), நெட் பேங்கிங் வசதிகள் (Net banking facilities) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அத்தனையையும் தற்போது அஞ்சல் துறையில் இருப்பதால் கவலைப்பட அவசியமில்லை. ஐபிபிபி முறை (IPPB - India Post Payments Bank) அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், எந்தவித டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளையும் மிக எளிதாக வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம்.
மெயில் பார்சல் (Mail Parcel):அஞ்சல் துறையின் உயிர் மூச்சு என்று கருதப்படக்கூடிய மெயில் பார்சலுக்கு தனி கவனம் செலுத்தி வரும் இந்திய அஞ்சல் துறை, மெயில் பார்சல் முறையை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ஆம் தேதி, மெயில் பார்சல் தினமாகவே கொண்டாடி வருகிறது. தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டும் 25 தபால்காரர்கள் உள்ள நிலையில், அவர்களில் 5 பேர் மெயில் பார்சலுக்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது நோடல் டெலிவரி மையம் என்பதால், சுற்றியுள்ள நான்கு அஞ்சல் நிலையங்களுக்கு இங்கிருந்து பார்சல்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. அதுபோக ஒவ்வொரு தபால்காரர்களும் பதிவு மற்றும் விரைவுத் தபால்களை கொண்டு சேர்ப்பதற்காக அரும்பணி ஆற்றி வருகின்றனர். மேலும் அன்றன்றைக்கான தபால்கள் அனைத்தையும் கொண்டு சேர்ப்பதில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். பிஎம்ஏ (PMA) என்று சொல்லக்கூடிய ரியல் டைம் டெலிவரி அப்டேட் மிகத் துல்லியமாக உள்ளது. திறமையாக இயங்கக்கூடிய தபால்காரர்களை அங்கீரிக்கும் வகையில், அக்குறிப்பிட்ட தினத்தில் அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது என்று முதுநிலை அஞ்சல் அலுவலர் மீனாட்சி குறிப்பிட்டார்.
ஆதார் (AADHAAR):மேலும் புதிய ஆதார் பெறவும், அதிலுள்ள விபரங்களை சேர்க்கவும், நீக்கவும் போன்ற பணிகளை அஞ்சலகங்கள் மேற்கொள்கின்றன. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். குடிமக்களை மையப்படுத்திய பல்வேறு சேவைகளை அஞ்சலகங்கள் வழங்கி வருகின்றன. இதன் மூலம் மின்சாரம், ரயில்வே, மொபைல் உள்ளிட்ட கட்டணச் சேவைகளை இங்கிருந்து பொதுமக்கள் மேற்கொள்ளலாம். வயதானவர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை அவர்கள் தங்களின் வீடுகளிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அஞ்சலகத்திற்கு வந்தால் ஐபிபிபி மூலமாகவும் பெற்றுச் செல்லலாம்.
இவ்வளவு வசதிகளை பொதுமக்களுக்காகச் செய்து தருகின்ற அஞ்சல் துறையை பொதுமக்கள் மேலும் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். மத்திய அரசு, கிராமங்கள் மட்டுமன்றி மலைப் பகுதிகளையும் கூட அஞ்சல் துறை மூலமாக இணைத்து, மேற்கண்ட அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது. ஆகையால் நகர்ப்புற, கிராமப்புற, கடலோர, மலைக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் துறையின் அனைத்துச் சேவைகளையும் தயக்கமின்றி பெற முன் வர வேண்டும். கடந்த 170 ஆண்டுகளாக இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்காக சேவை புரிந்து வருகிறது. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் அந்த சேவை தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்" என்று முதுநிலை அஞ்சல் அலுவலர் மீனாட்சி கூறினார்.
இதையும் படிங்க:வாழ்க்கையில் முன்னேறிய செல்வந்தர்களின் 7 ரகசிய குணம்.!