மதுரை: காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள கடைசி கிராமம் வரை ஊடுருவி நிர்வாகிகளை பெற்ற ஒரே இயக்கம் அதிமுக என அலசி, ஆராய்ந்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டு செல்வக்கில்லாமல் இருப்பதாக சொல்லும் கருத்து குருடர்களுக்கு அவரே சான்று என்றார்.
அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது அண்ணன், தம்பிகள் போல் ஒன்றுபட்டு உழைத்து கொண்டிருக்கிறார்கள். நம் தோழமையில் இருக்கிறவர்கள் நம்மைப்பற்றி இழிவாக பேசுவது மன வருத்தமளிக்கிறது. நாங்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்சமாட்டோம். எங்கள் மேல் தூண் விழுந்தாலும் துரும்பை கொண்டு எறிவோம், எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பா விட்டால் ஆற்றிலே விட்டு விடுவோம், அதிமுகவை நம்பியவர்கள் கேட்டதில்லை நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம் என கூறினார்.
நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய தமிழ்நாட்டில் திமுக பேச்சாளர் சைதை சித்திக் பெண்களை தரம் தாழ்ந்து பேசுகிறார். அதை திமுக தலைவர்கள் கண்டித்தார்களா? கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் குட்டிச்சுவராகப் போய்விட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். கேட்கின்றவன் ஏமாளியாக இருந்தால், எருமை ஏரோபிளைன் ஒட்டுகிறது என்பார்களாம். அப்படி இருக்கிறது முதலமைச்சர் பேச்சு. முதலமைச்சராகும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை எதிர்க்கட்சித் தலைவராக தான் தகுதி உண்டு என்றார்.