மதுரை மாவட்டம் செக்காணூரணி அ.கொக்குளம் கிராமம் பல்வேறு சாதியினர் வாழும் கிராமமாகும். இங்குள்ள பேய்க்காமன் கருப்பசாமி கோயில் மதுரை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலில் பட்டியலின மக்களே பல தலைமுறைகளாக பூசாரிகளாக இருந்துவருகின்றனர். அப்படி பூசாரிகளாக இருக்கும் பட்டியலின மக்களின் குடும்பங்களை தவிர பிற பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனைக் கண்டித்து பல தலைமுறைகளாக போராட்டங்கள் நடந்தும் பயனில்லை. இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்தவரும், பெங்களூருவில் பணியாற்றும் ஐடி ஊழியருமான அன்பழகன் கூறுகையில், 'நான் சமீபத்தில் பெங்களூருவிலிருந்து அ.கொக்குளம் வந்தேன். அப்போது கருப்பசாமி கோயிலில் வழிபடச் சென்றபோது, உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால் சாதியை சுட்டிக்காட்டினர். அதனால், சட்ட ரீதியாக போராட முடிவெடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில், 12 வாரங்களுக்குள் வட்டாட்சியர் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை. கோயில் வழிபாடு எங்களின் அடிப்படை மனித உரிமை. குறிப்பிட்ட சிலரால் உரிமை மறுக்கப்படுகிறது. அனைத்து சாதி மக்களும் ஒற்றுமையாக வழிபாடு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்' என்றார்.
தற்போது இந்த சிக்கல் பூதாகரமாக வெடித்துள்ளதைத் தொடர்ந்து, தங்களுக்கான உரிமையைக் கோரி பட்டியலினத்தவர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஜூலை 31-ஆம் தேதி கோவில் நுழைவுப் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தென்னரசு, குறிப்பிட்ட சாதியின் ஒரு தரப்பினர் மட்டுமே கோயில் பூசாரிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, இவ்வாறு இடையூறு செய்கின்றனர். காரணம் அவர்களால் அபகரிக்கப்பட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சம். நீதி வேண்டி தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியரையும், வட்டாட்சியரையும் சந்தித்து பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளோம். கொக்குளம் கருப்பசாமி கோயிலைப் பொறுத்தவரை அறநிலையத்துறைக்கு சொந்தமானது மட்டுமன்றி, இதன் பேரில் நன்செய், புன்செய் நிலங்கள் 8 ஏக்கர் அளவில் உள்ளன என்ற தகவலை இந்து அறநிலையத்துறை வழங்கியுள்ளது' என்கிறார்.