மதுரையில் வைகை கரை புட்டுத் தோப்பில் துறவியர்கள் மாநாடு, கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு, ஐயப்ப சேவா சமாஜம் மாநாடு, பசு பாதுகாப்பு மாநாடு, ஆடிப்பெருக்கு வைகையில் புனித நீராடல் உள்ளிட்ட நிகழ்வுகள், நாளை(ஜூலை- 24) முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதனைக் கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், திராவிடர் கழக வழக்கறிஞர் சங்கம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், சமநீதி வழக்கறிஞர் சங்கம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”வைகை நதியை காக்க என அறிவித்துவிட்டு சில குறிப்பிட்ட மத அடிப்படைவாத அமைப்புகள் தங்கள் மதவாத அரசியலை மதுரையில் நடத்த முற்படுகின்றனர். இந்த மதவாத அரசியலுக்கு அனைத்து மக்களுக்கும் பொதுவான வைகை நதியை கேடாக பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே வைகை நதி சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மாசுபட்டு வறண்டு கிடக்கிறது. அதில் மத நிகழ்வை நடத்த அனுமதித்தால் வைகை நதி இன்னும் மாசுபடும்.
வைகையின் பெயரில் மதப்பிரச்சார விழாவா? - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள் வைகையில் தண்ணீர் கொண்டுவர சுற்றுச்சூழல் அமைப்புகள் பாடுபடும் நிலையில், குறிப்பிட்ட மதவாத அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வைகைக் கரையிலும்கூட அனுமதிப்பது வைகையை நாசப்படுத்த மாவட்ட நிர்வாகமே துணை நிற்பது ஆகும். வைகை நதியில் மேற்படி குறிப்பிட்ட சில மத அடிப்படைவாத அமைப்புகளின் நிகழ்வே அனுமதிக்க கூடாது” என்றனர்.
இந்நிலையில் வைகை நதியை இந்து மதவாத அமைப்புகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையே #saveVAIGAIfromRSS# என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகிவருகிறது.