விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த கர்ப்பிணிக்கு வைரஸ் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் தடுக்கவும் மதுரை அரசு மருத்துவமனையில் ஒன்பது மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதி கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
சாத்தூர் கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்ஐவி இல்லை! - 2ஆம் கட்ட ரத்த பரிசோதனை
மதுரை: ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு 2ஆம் கட்ட ரத்த பரிசோதனையில் ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ளதா, இல்லையா என்பது குறித்து மார்ச் மாதம் நான்காம் தேதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, ஹெச்ஐவி நோய் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு பிறகு ஆறு மாதம் கழித்து இன்று இரண்டாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தைக்கு 2ஆம் கட்ட ரத்த பரிசோதனையில் ஹெஐவி பாதிப்பு இல்லை என அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் மூன்றாவது கட்டமாக நடைபெறும் ரத்த சோதனையில் ஹெச்வி பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த முடிவு இறுதி செய்ய வாய்ப்பு என மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.