மதுரை:பழங்காநத்தம் சுற்றுச்சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கப் பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று (மே 29) நடைபெற்றது. இதில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், 'தீர்மான விளக்கக் கூட்டத்தின் வாயிலாக உங்கள் 'நாட்டாமை' முதலமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்றார். இது வருகிற 2026ஆம் ஆண்டு தேர்தலின் போது, தெரியவரும் என்று கூறினார். மது உடல் ஆற்றலை இழக்க செய்து மனஅழுத்தத்தை உண்டாக்கி வருவதாகவும், இது பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பலவகையாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆகவே, அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது என்றார். வருகிற 2025-ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும் என்பதால் அவர்களின் மூளையை மழுங்கடிக்க செய்வதற்கான வெளிநாடுகளில் சதிதான் இந்த போதை பரவலாக்கம் என்று குற்றம்சாட்டினார்.
69 வயதான தான், 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளதாக பேசிய அவர், தன்னை 2026-ல் அரியணையில் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் அவற்றை தனிமனித ஒழுக்கத்துடன் புறக்கணித்தாலே போதும், அவை தானாகவே மூடப்படும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில் போதைக்கு அடிமையாக இருப்பதை பள்ளி சிறுவர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அரசை கேட்டுக்கொண்டார்.