'ஆடித்தபசு திருவிழா உள்திருவிழாவாக நடத்தப்படும்' - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயணன் கோயில் ஆடித்தபசு திருவிழாவை உள்திருவிழாவாக நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துவைரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சங்கரன்கோவிலுள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ஆடி மாதம் நடைபெறும் இந்தத் திருவிழாவானது ஹரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்ரீ கோமதி அம்மன் தவத்தினால் சங்கரலிங்கம், நாராயணர் சேர்ந்து சங்கரநாராயண சுவாமியாக காட்சியளிப்பதாகக் கொண்டாடப்படும்.
இந்த வருடம் கரோனா தொற்று காரணமாக கோயில் நிர்வாகம் சார்பாக ஆடித்தபசு திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் சங்கரநாராயண சுவாமி, ஸ்ரீ கோமதி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 18ஆம் தேதி இந்து அறநிலையத்துறை அறிவிப்பின்படி, திருவிழாக்களை கோயில்களின் முறைப்படி உள்திருவிழாவாக நடத்திக்கொள்ள அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். மேலும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது மூலம் விவசாயம் நன்றாக நடைபெறும் என்பது பக்தர்கள், பொதுமக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. எனவே பக்தர்களின் நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்படாமல் ஆடித்தபசு திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஆடித்தபசு திருவிழா உள்திருவிழாவாக நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.