சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணலூரைச் சேர்ந்த பொற்கோ என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "சிவகங்கை மாவட்டம் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி, அகரம், கொந்தகை, மணலூர், பாசியாபுரம் ஆகிய கிராமங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அங்கு வாழ்ந்த மனிதர்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.
அங்கு கிடைத்து வரும் தமிழ் பிராமி எழுத்துக்கள், பண்டைய பொருள்கள் போன்றவை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து வருகிறன. இந்நிலையில் அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் மணலூர் பகுதியில் சவடு மண் எடுப்பதாக கூறி, அரசின் அனுமதி பெற்று அரசு விதிகளை மீறி விவசாய நிலங்களில் ஆழமாக குழி தோண்டி அளவுக் கதிகமான மணலை அள்ளி வருகிறார்.
இதனால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதுடன், தொல்லியல் ஆய்வுகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.