மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம், பக்தர்களின் வருகை குறித்து மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, கோவில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சிறப்பு கட்டணம், செல்பேசி கட்டணம் வாயிலாக கோயில் நிர்வாகம் ஈட்டிய வருமானம் குறித்த ஆர்டிஐ தகவல்களில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 40 லட்சத்து 86 ஆயிரத்து 507 பேர் தரிசனம் செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமியையும், அம்மனையும் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள ரூபாய் 100 கட்டணமும், ஒரு தரிசனம் மட்டும் மேற்கொள்ள ரூபாய் 50 கட்டணம் என தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு வாயிலில் அமைந்துள்ள வீர வசந்த ராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து மதுரை உயர்நீதிமன்றம் கோயில் வளாகத்திற்குள் செல்பேசிகள் எடுத்துச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.