மதுரை:மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஊரக மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் மதுரைக்கு ரூ.19.94 கோடி ஒதுக்கப்பட்டது. அந்தவகையில் 39,172 கிலோமீட்டர் நீளம் கொண்ட மோசமான நிலையில் இருக்கும் சாலைகள் கண்டறியப்பட்டு, அவை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாலைகளைச் சீரமைக்க டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பணிகள் தொடங்காததால் விபத்து நிகழும் அபாயம்
கடந்த ஜனவரி 30ஆம் தேதி பணிகள் ஒதுக்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது வரை எவ்விதமான சீரமைப்புப் பணிகளும் தொடங்கவில்லை.
மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால், விபத்துகளும் அதிகளவில் நடைபெறுகிறது. ஆகவே, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு, இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'பேனர் வைப்பதை முழுமையாகத் தடைசெய்யும் வகையில் நடவடிக்கை வேண்டும்'