மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த தலமாகும். ஸ்மார்ட் சிட்டி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் அடிப்படையில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் இங்கே நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்றின் காரணமாக, அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், இப்பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரண்மனைக்கு உள்ளும், வெளியேயும் சீரமைப்புப் பணிகள் மிக விறுவிறுப்புடன் தற்போது நடைபெற்று வருகின்றன.
இது குறித்து தொல்லியல் துறையின் மண்டல உதவி இயக்குநர் சக்திவேல் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, "இந்த அரண்மனை 1623 - 1659ஆம் ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்பட்டது. இந்தோ சராசனிக் என்று சொல்லப்படுகின்ற, இந்திய ரோமானிய மற்றும் முகலாய கட்டடக்கலை பாணியை அடிப்படையாகக்கொண்டு கட்டப்பட்டதாகும்.
யமுனை நதியின் கரையில் உருவான தாஜ்மஹால், கட்டப்பட்ட சமகாலத்தில் தான் வைகை ஆற்றின் கரையில், திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் பேர், இந்த அரண்மனையைப் பார்வையிட வருகை தருகின்றனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலும் ஐரோப்பியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் 100க்கு 25 பேர் வடநாட்டுப் பயணிகளாக உள்ளனர்" என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஒரு வார காலமாக அரண்மனையின் உள்ளேயும், வெளியேயும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய முறைப்படி சிமென்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்புக் கலவை, கடுக்காய், கரும்புச் சாறு ஆகியவை கொண்டு அரண்மனைத் தூண்கள், சுவர்களில் உள்ள விரிசல்கள் பூசப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுபோன்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக்குழு தான் இங்கும் பணிகளை செய்துவருகிறது.
அரண்மனையின் வெளிப்புறம் உள்ள பூங்கா பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது. அவர்கள் அனைத்தும் முடிவுறும் நிலையில் உள்ளன. அரண்மனையின் உள்ளே நடைபெறும் பணிகள் ஜனவரியில் தொடங்கி, ஜூன் மாதம் நிறைவுபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கின் காரணமாக மேலும் மூன்று மாதங்கள் காலதாமதம் ஆகலாம்.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்தலங்களுக்குத் தளர்வு அறிவித்து, திறக்க உத்தரவிட வேண்டும், சீரமைப்புப் பணிகளுக்குத் தடையின்றி, போதுமான சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்துப் பொது சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி, சுற்றுலாப் பயணிகளை சிறப்பான முறையில், வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்" எனக் கேட்டுக்கொண்டார்.