மதுரை:இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ரஷ்யா - உக்ரேன் போரால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டனர். கல்விக்கடன் மூலமாகவும், சொந்த பணத்தை செலவிட்டும் எப்படியாவது பிள்ளைகள் மருத்துவராக வருவார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்த பெற்றோர்களின் கனவுகள் சிதறி விட்டன.
முதல் நான்கு ஆண்டு படித்த மாணவர்கள், படிப்பை இறுதி செய்யக்கூடிய நிலையில் இருந்த 5 மற்றும் 6 வது ஆண்டு மாணவர்கள்தான் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்ததைவிட, போர்முனையில் இருந்து தப்பித்து வந்ததையே இந்த மாணவர்கள் பெரிதாக கருதுகிறார்கள்.
ஏறத்தாழ 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். தற்போது செப்டம்பர் முதல் நேரடி வகுப்பு செயல்பட உள்ளது. பணத்தை கட்டிவிட்டு உக்ரைன் நாட்டிற்கு புறப்பட்டு வாருங்கள் என்று கல்லூரியின் சார்பாக மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிற்குச் செல்ல பாராளுமன்ற நிலைக்குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் இதற்கு தனிக்கவனம் செலுத்தி, மத்திய அரசிடம் அனுமதி பெற்று மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எய்ம்ஸ் பணிகள்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள், எப்போது தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.