இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேர் தனியாருக்கு மடைமாற்றம் செய்திருப்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்த தொழிலில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் கொள்ளையை தடுப்பதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.1.2007 அன்று இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 இன் கீழ் துவங்கப்பட்டது.
இதனை கண்துடைப்பாக தூங்கினாலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அந்நிறுவனத்தை புனரமைத்து புத்துயிர் அளித்தார். குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவையை அதிமுக அரசு வழங்கியது. இந்தியாவிலேயே மாநில அரசு நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் தான் மக்களிடத்திலே அரசு கேபிள் டிவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
142 கட்டணமில்லா அலைவரிசைகள் மற்றும் 49 கட்டண அலை வரிசைகளுக்கு ரூபாய் 220 மற்றும் ஜிஎஸ்டியை மாத கட்டணமாக நிர்ணயம் செய்து 1.2.2019 அன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.
இதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.220 மற்றும் ஜிஎஸ்டியாக இருந்த கட்டணத்தை 139 கட்டணமில்லா அலைவரிசைகள் மற்றும் 52 கட்டண அலைவரிசைகளுக்கு ரூபாய் 130 மற்றும் ஜிஎஸ்டியாக குறைத்து கட்டண நிர்ணயம் செய்து 31.7.2019 அன்று அறிவித்தார். இந்த கட்டணம் 10.8.2019 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.