ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், தான் உட்பட ஏழு பேரின் விடுதலையில் தமிழ்நாடு அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில்,"தமிழ்நாடு அரசு 7 பேர் விடுதலை குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு கொள்கை ரீதியாக விடுதலை செய்வது என முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் இதுகுறித்து இது வரையில் முடிவு எடுக்காமல் தற்போது எம்.டி.எம்.ஏ விசாரணையை காரணம் காட்டி உடனடியாக முடிவு எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை மாதம் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்த முடிவு சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பாக உள்ளது. மேலும், இந்த முடிவு தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவினை செல்லாக் காசாக்கிவிட்டதற்கு ஒப்பானதாகும். தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவையும் எம்.டி.எம்.ஏ பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் விசாரணையையும் தொடர்புபடுத்த முடியாது.
எனவே, தமிழ்நாடு அரசு மீண்டும் இதில் ஆளுநர் உரிய முடிவு எடுக்க வலியுறுத்தி கடிதம் அனுப்ப வேண்டும். தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு விடுதலை செய்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும். அல்லது இந்த வழக்கின் முடிவு தெரியும் வரை நான் உள்பட 7 பேருக்கு இடைக்கால நிவாரணமாக நீண்டகால பரோல் வழங்குவது தொடர்பாக சிறை விதிகளில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும்.
சிறை விதிகளில் திருத்தம் கொண்டு வரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மேலும் மத்திய அரசின் புதிய சிறை சீர்திருத்த விதிகள் தமிழ்நாட்டில் அமல்படுத்தவில்லை. ஆகவே, காலத்திற்கு ஏற்ப மறுஆய்வு செய்து திருத்தங்களை உடனே எடுத்து தங்களுக்கு நீண்ட கால பரோலாக ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடம் வரை விடுப்பு வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:எழுவர் விடுதலையில் ஆளுநர் மௌனத்துக்கான காரணம் இதுதான்! - முன்னாள் சிபிஐ அலுவலர்