மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஈடுபாடு இருக்கும் அதுபோல தான் நடிகர் ரஜினிகாந்திற்கு ஆன்மிகத்தில் ஈடுபாடுவுள்ளது. அதனால் தான் அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் குறைந்த விலையில் உணவு மற்றும் மருந்துகள் கொடுப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
’தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. அதேபோல் சமூகநீதிக்கான மாநிலமாகவும் உள்ளது. இதற்கு காரணம் மாநிலத்தில் உள்ள ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கியவர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அத்தனைபேருக்கும் நல்வாழ்வுத் திட்டங்கள் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் நம்மைப் பார்த்து உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மடிக்கணினி வழங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். ஆனால் அவர்களால் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ஆனால் நாம் தொடர்ச்சியாக இலவச மடிக்கணினி திட்டத்தை வழங்குகிறோம்’ என்றார்.
மேலும் 100 நாள் வேலை வாய்ப்பை அதிமுக அரசு சரியாக செயல்படுத்தவில்லை என ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, 'கிராமப்புறம் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக நமது அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்களுக்குத் தெரியாது. ஸ்டாலினுக்கு குற்றம் சொல்வது தான் வேலை. பிரதமர் வரும்போது Go Back Modi என்று கூறுவார். ஸ்டாலினை பொறுத்தவரை நேற்று ஒன்று பேசுவது, இன்று ஒன்று பேசுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் சீன அதிபர் சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடி வேட்டி கட்டியது பற்றிய கேள்விக்கு, ‘உலக அளவில் தமிழ்நாடு பிரதிபலிக்கிறது. உலக அளவில் சென்னை பிரதிபலிக்கிறது. உலக அளவில் மாம்மல்லபுறம் பிரதிபலிக்கிறது. நமது கலாசாரம் அனைத்தும் தமிழ்நாடு மற்றும் சீனா இடையே பேசப்பட்டுள்ளது. எந்தத் தலைவர்களும் வந்தால் வடமாநிலங்களுக்குத்தான் செல்வார்கள். தற்போது தெற்கே கடைக்கோடியில் உள்ள மாமல்லபுரத்தில் வந்து உள்ளார்கள் என்றால், எல்லோரும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் பாரம்பரிய முறைப்படி முதலமைச்சர் சிறப்பான வரவேற்பை செய்திருந்தார் என்பதுவே’ என்றார்.
இதையும் படிங்க:கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ