மதுரை: கரோனா இரண்டாம் அலை உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒன்றிய, மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் கரோனா 3ஆம் அலை உருவாகலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் மருத்துவக் கட்டமைப்பை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது என அண்மையில் கூறியிருந்தார்.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மையத்தில் குழந்தைகளுக்கென தனி சிகிச்சை மையம் ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியுள்ளது. குழந்தைகளுக்கான ’ஜீரோ டிலே வார்டு’ என்ற பெயரில் இந்த வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு கரோனா அறிகுறி இருக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 படுக்கைகள் கொண்ட இந்த சிறப்பு வார்டு பிரிவில், தற்போது இரண்டு குழந்தைகள் கரோனா தொற்று பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மதுரை அரசு இராசாசி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா எதிர்பாற்றல் சக்தி அதிகரிப்பு - மருத்துவ இயக்குநர் தகவல்