மதுரை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 26 வயதான பார்வதி யானையின் இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கண்ணிலும் கண்புரை பரவியது.
இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் முன்னேற்றம் இருப்பதாக சொல்லப்பட்டது. இருந்த போதும் தாய்லாந்து மருத்துவர்கள் இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் வழியாக பார்வதி யானையை பார்வையிட்டு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்து வந்தனர்.
இந்நிலையில் தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள யானை பார்வதியை நேற்று நேரில் பார்வையிட்டு அதற்கு கண்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென ஆய்வு செய்தனர்.
அப்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் யானை பார்வதிக்கு கண் பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சேகர்பாபு பார்வதி யானையை நேரில் வந்து பார்வையிட்டார்.