மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் கடந்த 2001ஆம் பணியின் போது இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என அவரது மகள் பரணிசக்தி 2006ஆம் ஆண்டு கல்வித்துறையில் மனு அளித்தார். இதையடுத்து அவரது மனுவை கல்வித்துறை அலுவலர்கள் நிராகரித்தனர்.
இந்நிலையில் கல்வித்துறை அலுவலர்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கருணை வேலை போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்களை அமல்படுத்தும் போது அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரிப்பதில் அலுவலர்கள் எவ்வித சமரசத்துக்கும் இடமளிக்கக்கூடாது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும். கருணை வேலை என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கனவு கருணை வேலைவாய்ப்பு திட்டத்தால் பறிபோகக்கூடாது. அரசு வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.