மதுரை :தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் தீண்டாமையை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்தைக் காக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 2012ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அத்திட்டத்தின்படி கிராமத்தைத் தேர்வு செய்வதற்கு எட்டு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதுடன் ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் செயல்பட்டு வருகிறது. அந்தக் கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொதுக்கோயில், குடிநீர் கிணறு, கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை அனைவரும் சுதந்திரமாக அனுபவிக்கும் நிலை இருக்க வேண்டும்.
தனியாருக்குச் சொந்தமான கிணறுகளில் ஆதி திராவிடர் மக்கள் தண்ணீர் எடுப்பதற்குத் தடை இருக்கக்கூடாது. ஆதி திராவிட மக்களுக்கு இதர சமூக மக்கள், அவர்களின் வீடுகளை வாடகைக்கு கொடுக்க வேண்டும். விழாக்களில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ண வேண்டும். பிற சமூக மக்களின் விழாக்களில் ஆதி திராவிட மக்களை பங்கேற்க அழைக்க வேண்டும்.