மதுரை:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம் 2019ஆம் ஆண்டில் இருந்து தனி நபர்களிடம், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் முதலீட்டாளர்களை இணைத்துள்ளது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட நிறுவனம் தங்களது பணத்தை ஏமாற்றிவிட்டதாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலர் அவர்களின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றும் செல்வம் கூறுகையில், “ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாயாக திரும்பக் கிடைக்கும் என கூறினார்கள். மேலும், நிறுவனம் தரவில்லையென்றால், அதன் பொறுப்பிலுள்ள நாங்கள் தருகிறோம் என்று நிர்வாகிகள் வாக்குறுதிகள் அளித்தனர். அதன் பேரில் நாங்கள் நம்பி எங்களது பணத்தை முதலீடு செய்தோம்.
முதலீடு செய்த முதல் இரண்டு மாதங்களில் பணம் சரியாக எங்களுக்கு வந்தது. அதற்குப் பிறகு அந்தத் திட்டத்தை மாற்றி 5 லட்சம் ரூபாய் முதலீடாகப் போடச் சொன்னார்கள். இந்தத் தொகைக்கு ஒரே மாதத்தில் 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும், தொடர்ந்து 10 மாதங்களுக்கு கிடைக்கும் என்றனர். அதிலும் நாங்கள் முதலீடு செய்தோம். இதற்காக வங்கிகளில் தனிக்கடன், வீடு மற்றும் நகைகள் அடமானம் வைத்து பணத்தை முதலீடு செய்தோம்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் 18 மாதங்களுக்குப் பிறகு 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றார்கள். 18 மாதங்களும் முடிந்து இதுவரை ஒரு பைசா கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தொடர்ந்து பல்வேறு வகையில் ஏமாற்றி வருகின்றனர். அச்சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைக் காரணமாகக் காட்டினார்கள். பணம் கிடைக்கவில்லை என்று புகார் அளித்தால் எந்த பயனும் உங்களுக்கு கிடைக்காது என்றும் அரசியல்வாதி ஒருவரைக் குறிப்பிட்டு மிரட்டுகிறார்கள். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்.