மதுரை:மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் மலர் சந்தையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.
கரோனா தொற்றின் காரணமாக மலர் சந்தை தற்காலிகமாக மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த நிலையில் கடந்த சில நாள்களாக நிரந்தர மலர் சந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
வியாபாரிகள் மகிழ்ச்சி
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள் காரணமாக மதுரை மலர் சந்தையில் மல்லிகை உள்ளிட்ட அனைத்துப் பூக்களின் விலை நிலவரம் விவசாயிகள், வியாபாரிகளை சற்றே மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இன்று மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகை கிலோ ரூ.700, முல்லை ரூ.600, பிச்சி ரூ.500, செவ்வந்தி ரூ.200, சென்று மல்லி ரூ.120, பட்டன் ரோஸ் ரூ.200, அரளி ரூ.600, சம்பங்கி ரூ.250, தாமரை ஒன்று ரூ.20, மரிக்கொழுந்து ரூ.120 என பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து இருந்தது.
மதுரை மலர் சந்தை சிறு பூ வியாபாரி சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ”கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டு விற்பனை மந்த நிலையில்தான் உள்ளது. கரோனா தொற்றின் காரணமாக பூ உழவர் தங்களது தொழிலைக் கைவிட்டுவிட்டனர். ஆகையால் மலர் சந்தைக்கு தற்போது பூக்களின் வரத்து மிகக் குறைவாகவே இருந்துவருகிறது” என்றார்.
இதையும் படிங்க : ஆயுத பூஜை அன்று இதையெல்லாம் செய்யணுமாம்!