மதுரை:மகா சிவராத்திரி நாளை (பிப்.18) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல் முறையாகத் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து நாளை காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் திரெளபதி முர்மு, நண்பகல் 12 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் மாலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு நாளை காலை முதல் மதுரை மாநகரில் சில போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்குப் பொதுமக்களும், வியாபாரிகளும் மற்றும் விமானநிலையத்திற்குச் செல்லும் பயணிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ள சாலைகள்: மதுரை விமான நிலையம், விமான நிலையம் முதல் தெற்கு வாசல் சந்திப்பு வரை, தெற்கு வெளி வீதி முழுவதும் - தெற்குவாசல் சந்திப்பு முதல் கிழக்கு வாசல் சந்திப்பு வரை, கிழக்கு வெளிவீதி முழுவதும், காமராஜர் சாலை விளக்குத்தூண் முதல் கீழவாசல் சந்திப்பு வரை, மீனாட்சி அம்மன் கோயில் தெரு, வெண்கல கடைத் தெரு,
தெற்கு ஆவணி மூல வீதி பழைய காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து ஜடாமுனி கோயில் சந்திப்பு, கிழக்கு மாசி வீதி - மொட்டை பிள்ளையார் கோயில் முதல் விளக்குத்தூண் வரை, அழகர் கோயில் சாலை இருபுறமும் கோரிப்பாளையம் முதல் தாமரை தொட்டி வரை ஆகும்.
போக்குவரத்து பாதை மாற்றங்கள்:
தெற்கு வாசல் சந்திப்பிலிருந்து பெருங்குடி வழியாக மண்டேலா நகர் செல்லக்கூடிய பேருந்துகள் முத்து பாலம், தேவர் பாலம் வழியாக பழங்கானத்தம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக நான்குவழிச்சாலையை அடைந்து மண்டேலா நகர் செல்ல வேண்டும்.