மதுரை:நாடு முழுவதும் இன்று (பிப்.18) மகா சிவராத்திரி அனைத்து சிவன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக திட்டமிட்டு இருந்தார்.
இந்த திட்டத்தின்படி, இன்று காலை 11.30 மணிக்கு மேல் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைவார் என்றும், அங்கிருந்து பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அங்கு நிகழ உள்ள அன்னதான விழாவில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.
இதனையடுத்து கோவை விமான நிலையம் சென்றடையும் திரெளபதி முர்மு, அங்கிருந்து கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். பின்னர் நாளை (பிப்.19) கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வந்ததார்.