மதுரை: மதுரையைச்சேர்ந்த விக்டோரியா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அரசு மகளிர் மீனாட்சி கலைக்கல்லூரி முன்பாக மாணவி ஒருவரின் தந்தையை இளைஞர்கள் தாக்கினர். இதேபோல் மதுரையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அத்துமீறிச் சென்று, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு அட்டகாசங்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வைரலாகப் பரவியது. இதன் காரணமாக மகளிர் கல்லூரிகளில் படிக்கும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மத்திய அரசு சார்பில் நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நிதி ஒதுக்கப்படுகின்றன. இந்த திட்டமானது 8 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்பொழுது வரை தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்வி நிறுவனத்திலும் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக பெண்களை அச்சுறுத்தும் விதமாக கல்லூரி வாசல்களில் நிகழும் சம்பவங்களை தடுப்பதற்காகவும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் வாசலில் நிரந்தரமாக காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதுகுறித்து அரசிடம் மனு அளித்தும் எந்த விதவிதமான நடவடிக்கையும் இல்லை, எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவிகள் பாதுகாப்புக்காக எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.