விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மாவட்டத்திலுள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு (ஆகஸ்ட்.20) விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, அதுசார்ந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளும் நடைபெற்றது. இச்சம்பவம் பல்கலைக்கழக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடையும் ஒருவித பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தியது.
பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டது தொடர்பாக மாணவர் - இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள் கூறுகையில்," அரசு சார்ந்த எந்த நிறுவனத்திலும் மத, சாதிய அல்லது மக்களிடையே பிரிவினை உருவாக்கும் எந்த ஒரு அடையாளமும் இருக்கக்கூடாது என்பதே விதி. அதனையே நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.
இதனை மீறி அரசியல சட்ட மாண்புகளையும், பல்கலைக்கழக விதிகளையும் மீறி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரவோடு இரவாக ஒரு மதத்தின் சார்பான சிலை வைத்து கோவில் கட்டுவதற்கான வேலைகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இக்கோயில் கட்டுவதற்கான ஒப்புதலும், அதற்கான ஏற்பாடுகளோ பல்கலைக்கழகத்தின் எந்த மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டன என்பதை நிர்வாகம் வெளியிட வேண்டும்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இதற்கு முன்பு எப்போதும் பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் கொண்டாடப்படாத விநாயகர் சதுர்த்தி நிகழ்வினை நடத்திட நிர்வாகம் தயாராகி வருவது மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயலாகும்.
உயர் நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் பொது வெளியில் விழா கொண்டாடக்கூடாது என்கிற உத்தரவினை வெளியிட்டும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் இப்படி வெளிப்படையாக அரசின் அறிவுறுத்தலையும் மீறி, இப்படி செய்வது உயர்கல்வி மையத்திற்கான பண்பல்ல என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
எனவே மாவட்ட நிர்வாகமும், அரசாங்கமும் திடீரென நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலையை அனைத்து தரப்பு மாணவர்களும் பயிலக்கூடிய கல்வி நிலைய வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும். இதற்கு காரணமான பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக தகவலறிந்த பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமையவிருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டு, அவ்விடத்தில் பூந்தொட்டிகளை பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.