மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் "சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாள்தோறும் 2000 வழக்குகள், அதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் 2000 மேற்பட்ட வழக்குகள் நாள்தோறும் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் வழக்குகளை தாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும் என்றால் போதிய அளவு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
202 வழக்கறிஞர்கள் காலிபணியிடங்கள்
தற்பொழுது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் 202 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு வழக்கறிஞர்கள் கூடுதலாக பணிபுரியும் சூழல் உருவாகி, வழக்குகளை விரைவாக முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர், அரசு கூடுதல் வழக்கறிஞர், அரசு சிறப்பு வழக்கறிஞர் உள்ளிட்ட காலி பணியிடங்களை விரைவில் நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.