மதுரை: சென்னை பல்லாவரம் எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகள் 17 வயது சிறுமியை கொடுமைபடுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள எவிடென்ஸ் அமைப்பு அலுவலகத்தில் இன்று (ஜன.19) செய்தியாளர்களைச் சந்தித்து எவிடென்ஸ் கதிர் பேசினார்.
அப்போது, "பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன் - மருமகள் வீட்டிற்கு ஏஜெண்ட் மூலமாக மாதம் 16 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 17 வயதிலேயே சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளிலேயே அந்த சிறுமியைத் தாக்க தொடங்கியுள்ளனர். மூன்று வேளையும் சமைத்து தர வேண்டும் எனக் கூறி, பல்வேறு பொருட்களை வைத்து கொடூரமாக தாக்கி, கையில் சூடு வைத்து மிளகாய்ப்பொடியை கரைத்து முகத்தில் ஊற்றி கொடுமை செய்துள்ளனர்.
சமூகநீதி, பெண்கள் நலன் பேசும் திமுகவினர், பெண் குழந்தையை வீட்டில் வைத்து அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். இப்போது கேட்டால் மகன் செய்தது எனக்கு தெரியாது எனக் கூறுகிறார் எம்எல்ஏ. இவர் எதற்கு அரசியலில் இருக்கிறார்? சிறுமியை எம்.எல்.ஏவின் மகன், மருமகள் கழிவறையில் உடமைகளை வைத்து தங்க வைத்துள்ளனர்.
நீயும் நானும் ஒன்னா என சாதி ரீதியாக கேட்டு, ரேசன் அரிசியை சமைக்க வைத்து தனி சாப்பாடு மட்டும் சாப்பிட வைத்து கொடுமை செய்துள்ளனர். நீட் தேர்வு எழுதி படிப்பதற்கான கல்விச் செலவுக்காக வேலைக்கு வந்த பெண்ணை கொடுமை செய்துள்ளனர். சிறுமியை வீட்டிற்குள் பூட்டி வைத்து அடைத்து, செல்போனை பறித்து வைத்துள்ளனர். அவர்களுடைய குழந்தையை சிரிக்க வைப்பதற்காக சிறுமியை ஆட வைத்து கொடுமைபடுத்தியுள்ளனர்.