மதுரை: தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில், அக்டோபர் மாத பயணச்சீட்டு குறித்து மேற்கொண்ட பரிசோதனையின் வருமானம் குறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் ரயில் நிலையங்கள், ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு சோதனைகள் நடைபெற்றன.
அதன் மூலம் மதுரை கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனை வருமானமாக 1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 26 ரூபாய் ஈட்டியுள்ளது. பயணச் சீட்டுகள் இல்லாமலும், தகுதியற்ற பயணச்சீட்டுகளை வைத்தும் பயணம் செய்த 15 ஆயிரத்து 734 பேர் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக 1 கோடியே 6 லட்சத்து 13 ஆயிரத்து 680 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிய பதிவு செய்யாமல், அதிக அளவில் உடைமைகளை ரயில்களில் கொண்டு சென்ற 308 பேர் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் அபராதமாக 1 லட்சத்து 98 ஆயிரத்து 346 ரூபாய் என, அக்டோபர் மாதம் மட்டும், 1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 26 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்துகளை தவிர்க்க ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே சட்டம் 1989-ல் உள்ள பிரிவுகள் 67, 154, 164, 165 ஆகியவற்றின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.