மதுரை : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் பிப்.26 ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பொதுமக்களிடையே, ‘வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மாநில தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு உத்திகளை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த பரப்புரைக்கு தோள்கொடுக்கும் வகையில், திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் முன்பு எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என பதாகை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் தம்பதியருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது.
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை பகுதியில் அம்பேத்கர் காலனியில் லோகராஜ் - சுப்புலட்சுமி தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வசித்து வருகின்றனர். லோகராஜ் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டு வாசலில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என எழுதப்பட்ட பதாகையை தொங்கவிட்டுள்ளனர்.