மதுரை: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ள வேளாண் வரவு-செலவு அறிக்கை குறித்து இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை உலக அளவில் இதுவரை வெளியிட்டதாக வரலாறு இல்லை. தமிழ்நாட்டில் முதல் முறையாக அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கது. இதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாகத் திகழ்வது பாராட்டிற்குரியது.
ஒரு துறையை மேம்படுத்துவதற்கு அதன் போக்கு திசையைக் காட்டுவதற்கான ஒரு யுத்தியே இந்த வரவு-செலவு அறிக்கை. நிதி ஒதுக்கீடு, சலுகைகள், வாய்ப்புகள் என அனைத்தையும் இந்த நிதிநிலை அறிக்கையில்தான் நாம் பார்க்க முடியும்.
அந்த அடிப்படையில் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு வேளாண் துறை வளர்ச்சிக்கு தனிகவனம் கொடுத்து முக்கியத்துவம் அளித்திருப்பது சிறப்புக்குரியது.
வேளாண்மைக்கான கொள்கை முடிவுகள்
ஆனால், அதே நேரம் வேளாண்மைக்கான கொள்கை முடிவுகள் என்பது மிக மிக அவசியம். வேளாண்மையை எதை நோக்கி கொண்டு செல்லப் போகிறோம்?, என்ன மாதிரியான திட்டங்களை உருவாக்கப் போகிறோம்? என்ற அடிப்படையில் கொள்கைப் பார்வை வேண்டும். அதற்கு மாறாக இருக்கும்பட்சத்தில் இந்த முயற்சி வேறு சிக்கலுக்குள் ஆளாக்கி விடும் அபாயமும் உண்டு.
பசுமைப்புரட்சிக்குப் பிறகு நமது வேளாண்மை என்பது ஒரு சில நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. குறிப்பாக இடுபொருள்களான வேதி உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள் என இவையனைத்தும் ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சென்று நமது விவசாயிகளை சிக்க வைத்துள்ளன. இதிலிருந்து விடுபட்டு, விவசாயிகள் தற்சார்புள்ளவர்களாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வதற்கான ஒரு திட்டத்தை கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
அதற்கான ஒதுக்கீடுகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அது வெற்றிகரமான நிதிநிலை அறிக்கையாக இருக்க முடியும். புதிய அரசுக்கும் அது பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டு முதலமைச்சரும் கூட அதை நோக்கி சிந்திப்பதாகவே நான் கருதுகிறேன். அவரது பல்வேறு கூட்டங்களில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும் என உத்தரவாதமாகப் பேசி வருகிறார். அந்த அடிப்படையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என நான் கருதுகிறேன்.
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மையை நோக்கி நமது தமிழ்நாடு வேளாண்மையை திசை திருப்ப வேண்டும். வேதி உரம் சார்ந்த வேளாண்மை வேண்டாமா என்றால், அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். மூன்றிலிருந்து நான்கு விழுக்காடாக உள்ள இயற்கை வேளாண்மை 30, 40, 50 என படிப்படியாக உயர்த்த வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும்.
இயற்கை வேளாண்மையின் மூலமாக அனைவருக்குமான உணவை உத்தரவாதப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுவது இயல்பு. உறுதியாக இதனைச் செய்ய முடியும். அதற்குப் பல்வேறு சான்றுகள் நம்மிடம் உள்ளன. தமிழ்நாட்டுலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்ற உழவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மூலமாக விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
வேளாண்மைக் கல்லூரிகள்தான் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை முடிவாகக் கொண்டிருக்கிறோம். வேளாண் கல்லூரியில் உள்ள விஞ்ஞானிகளுக்கே நாம் விழிப்புணர்வு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
யூரியா போடாமல் செடி வளராது என்பது போன்ற பொருந்தாத முடிவுகளைக் கொண்டிருக்கிறார்கள். நமது காற்று மண்டலத்தில் 78 விழுக்காடு ஹைட்ரஜன் உள்ளது. அதனை யோசிக்காமல் யூரியா மீது பற்றுக் கொண்டவர்களாக படித்த விஞ்ஞானிகள் உள்ளனர் என்பது வேதனைதான்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபமே குறிக்கோள்
தற்போது இரண்டு வகையான போக்குகளை நாம் பார்க்கலாம். சிறு குறு உழவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த நிலங்களைத் தொகுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது. மற்றொன்று ஒப்பந்த சாகுபடி மூலமாக பெரு நிறுவனங்களுக்கு வழங்குவது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைப்பதற்கேற்றவாறு வேளாண்மையைத் திசை திருப்புவது. குறிப்பாக அவர்கள் விரும்பும் வகையில் மக்காச்சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு என ஒற்றைப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பது.
இதற்கு மாற்றாக விவசாயிகள் ஒன்றிணைந்து கூட்டுப்பண்ணைகளை உருவாக்கி, அவர்களுக்குள்ளாக பகிர்ந்து கொள்வது, அதனை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். பொதுவாக தமிழ்நாட்டு சந்தையை குறி வைத்து உற்பத்தி செய்வது என்ற போக்கும் நிலவுகிறது. இந்த முறை மிக மிக சிறிய அளவில் நடைபெறுகின்றது.