சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் காவல் விசாரணையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை சிபிஐ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மற்றொரு கைதியான ராஜாசிங் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினரும் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் சிபிஐ தரப்பில் இரண்டு வழக்குகளில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.