இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மத்திய அரசின் ஏ.ஐ.சி.டி.இ.யின் நிதியுதவியுடன் செயற்கை உயிரியியல் (சிந்தடிக் பயாலஜி) ஐந்து நாள்கள் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம், நவம்பர் 30 முதல் டிசம்பர் 4ஆம் தேதிவரை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதற்கான நிதியுதவியை மத்திய அரசின் ஏ.ஐ.சி.டி.இ. பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது.
இந்தியா முழுவதிலிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 97 உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் ஏ.ஐ.சி.டி.இ.யின் அடல் இணையத்தில் பதிவுசெய்திருந்தனர். இவர்களிலிருந்து 200 பேரை தேர்வுசெய்து ‘செயற்கை உயிரியியல்’ சார்ந்த அடிப்படை அறிவியல் கொள்கைகள், பயன்பாடு மற்றும் எதிர்கால முன்னேற்றம் என்ற பல தலைப்புகளில் துறையின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் சிறப்புரையாற்றினர்.
செயற்கை உயிரியல் உதவியுடன் உயிரி தொழில்நுட்பங்கள் (பயோடெக்னாலஜி) மருந்துகள் தயாரிப்பு, தொழில்முறை தேர்வர்கள், உயிரி ஆயுத ஆபத்துகள் மற்றும் எதிர்கால போக்குகள் எனப் பல்வேறு கருத்துகள் பங்கேற்பாளர்களுக்கு 14 இணையவழி வகுப்புகள் மூலம் வழங்கப்பட்டன.