இன்று உலகம் முழுவதும் உலக கிட்னி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக சிறுநீரகவியல் துறை வல்லுநர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.சம்பத்குமார், "இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் நீரிழிவு பாதிப்பு நபர்களைக் கொண்டிருக்கிற மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. 30 விழுக்காடு வரையிலான நீரிழிவு நோயாளிகளுக்கு நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் ஏற்படுகிறது.
குடும்பத்தில் ஒருவருக்கு சிறுநீரக நோய் இருந்த வரலாறு இருக்குமானால், அதுவும் ஒரு இடர் காரணியாக இருக்கக்கூடும். ரத்த சர்க்கரையையும், ரத்த அழுத்தத்தையும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறுநீரகத்தை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அத்தியாவசியமானது" என்றார்.
பின்னர், சிறுநீரகவியல் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் ஆர். ரவிச்சந்திரன் பேசுகையில், "நாட்பட்ட தீவிர சிறுநீரக நோயானது, மூன்று வழிகளில் கண்டறியப்படுகிறது. மூன்று மாதங்களுக்கும் அதிகமாக ரத்தத்தில் இருக்கிற யூரியா, கிரியாட்டினன் என்று அழைக்கப்படுகின்ற புரதங்களில் குறிப்பிட்ட அளவு தொடர்ந்து நிலையான அதிகரித்தல்.